உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உத்தரவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 01-04-2025 | 6:33 PM

Colombo (News 1st) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களுடன் தொடர்புடைய வாக்களிப்பு நடவடிக்கைகளை நாளை வரை இடைநிறுத்துமாறு குறித்த தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(01) உத்தரவிட்டுள்ளது.

வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 30-இற்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதிபதி மொஹம்மட் லஃபார் தாஹிர் மற்றும் நீதிபதி கே.பி பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

தமது சேவைபெறுநர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்கும் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் தீர்மானம் முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அந்தக் கட்சி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா சுட்டிக்காட்டினார்.

தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தமது சேவைபெறுநர்களின் வேட்புமனுக்களை நிராகரித்தமை சட்டத்திற்கு முரணானது என ஏனைய மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி உள்ளிட்ட சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

விடயங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம், குறித்த மனுக்களை மேலும் பரிசீலிக்க வேண்டியுள்ளதால் விடயங்களை உறுதிப்படுத்தும் வகையில் மனுக்களை நாளை(02) மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.