ஜனாதிபதி, பிரதமரின் நோன்பு பெருநாள் வாழ்த்து

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவரின் நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்திகள்

by Staff Writer 31-03-2025 | 10:45 AM

Colombo (News1st) 

இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை இன்று (31) கொண்டாடுகின்றனர்.

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி உள்ளிட்ட பலரும் தமது வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்துள்ளனர்.

சுதந்திரம், சமத்துவம், ஒற்றுமை மற்றும் கண்ணியம் நிலவும் ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப தாம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்பில்  இஸ்லாத்தின் போதனைகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

பொதுமக்களின்  நிதி மற்றும் அரச சொத்துக்களை அழிக்கும்  அநாகரிகமான அரசியல் கலாசாரத்திற்கு பதிலாக எளிமை மற்றும் அர்ப்பணிப்புடன் மக்களின் உணர்வுகளை உணரக்  கூடிய ஒரு அரசியல் கலாசாரத்தையும் பிரஜைகள் சமூகத்தையும் நாட்டில் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ரமழான் மாத செயற்பாடுகள் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் என ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு மூலம் எதிர்காலத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

இந்த ஈகைத் திருநாள் நாட்டு மக்களுக்கு நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, நீதி மற்றும் அமைதியை நோக்கி செயற்பட வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுவதாக அமைந்துள்ளதாக பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டார்.  

இதனிடையே, தம்மைப் பற்றி மட்டுமின்றி, ஏனையோரைப் பற்றியும் சிந்தித்து அனைவரையும் உள்ளடக்கிய சுபீட்சத்தை நோக்கி பயணிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

இது நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு, மீண்டும் சுபீட்சத்தை நோக்கிய பயணத்திற்கான ஆரம்பமாக அமையுமென எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.