மியன்மார் நிலநடுக்கம் ; 1000 பேருக்கு மேல் பலி

மியன்மார் நிலநடுக்கத்தில் 1000 பேருக்கு மேல் பலி

by Staff Writer 29-03-2025 | 3:43 PM

Colombo (News 1st) மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளது.

காயமடைந்தோரின் எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தின் பாங்கொக்கில் 3 கட்டடங்கள் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்ததுடன் 16 பேர் வரை காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும் 101 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சீன மீட்புக் குழுவொன்று மியான்மரை சென்றடைந்துள்ளது.

இந்தக் குழுவில் 37 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலுதவி உபகரணங்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களுடன் குறித்த குழுவினர் மியன்மாரை சென்றடைந்துள்ளனர்.

சீனாவின் யுன்னான் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வௌியாகியுள்ளன.

இதனிடையே  நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு  நிவாரணம் வழங்குவதற்காக மியான்மாருக்கு மனிதாபிமான உதவிப்பொதிகளை வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.

மனிதாபிமான உதவிப் பொதிகளில் கூடாரங்கள், சுகாதாரப் பொருட்கள், உணவு, நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் நேற்று(28) 7.7 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது.