கொழும்பு இரவு களியாட்ட விடுதி தாக்குதல்

கொழும்பு இரவு களியாட்ட விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்: இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

by Staff Writer 25-03-2025 | 10:48 AM

Colombo (News1st) பொலிஸில் வாக்குமூலம் வழங்க யோஷித ராஜபக்ஸவுக்கு அறிவிப்பு

இரவு நேர களியாட்ட விடுதி பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கொம்பனித்தெரு பொலிஸில் இன்று வாக்குமூலம் வழங்குமாறு யோஷித ராஜபக்ஸவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனான யோஷித ராஜபக்ஸவும் அவரது மனைவியும் மேலும் சிலருடன் கொழும்பு யூனியன் பிளேஸ் - பார்க் வீதியில் அமைந்துள்ள இரவு நேர களியாட்ட விடுதியொன்றுக்கு அண்மையில் சென்றிருந்தனர்.

இரவு களியாட்ட விடுதிக்குள் நுழைய முற்பட்டபோது அடையாளம் காண்பதற்கான பட்டியை கைகளில் அணிவதை யோஷிதவும் அவரது மனைவியும் மறுத்ததால் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.

இதன்போது ஏனைய தரப்பினரால் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் தெஹிவளை அத்திட்டிய மற்றும் திம்பிரிகஸ்யாய பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளங்காணப்பட்டதுடன் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில்  கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்