அமெரிக்க அதிகாரிகளின் குழுவில் தவறுதலாக இணைந்தவர்

அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளின் ஊடகக்குழுவில் இணைக்கப்பட்ட ஊடகவியலாளர்

by Chandrasekaram Chandravadani 25-03-2025 | 4:12 PM

Colombo (News1st) அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சமூக ஊடகக்குழுவில் ஊடகவியலாளர் ஒருவர் தவறுதலாக இணைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இணைந்துள்ள யேமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்கள் தொடர்பான சமூக ஊடகக்குழுவில் குறித்த ஊடகவியலாளர் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 15ஆம் திகதி அமெரிக்காவினால் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு 4 நாட்களுக்கு முன்னர் குறித்த ஊடகவியலாளர் குழுவில் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குழுவில் கலந்துரையாடப்பட்டமைக்கு அமைவாக மார்ச் 15ஆம் திகதி அமெரிக்காவினால் யேமன் ஹூதி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகவியலாளரால் செய்தி அறிக்கையிடப்பட்டது.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், பாதுகாப்பு செயலாளர் பீ.டி.ஹெக்சென், சீ.ஐ.ஏ. பணிப்பாளர் ஜோன் ரெட்க்ளிப் உள்ளிட்ட உயரதிகாரிகள் இந்த குழுவில் உள்ளனர்.

சபாநாயகர் மைக் ஜோன்சனால் ஊடகவியலாளர் தவறுதலாக குழுவில் இணைக்கப்பட்டதாகவும் இவ்வாறானதொரு சம்பவம் மீண்டும் நிகழாதெனவும் அவர் தெரிவித்தார்.

இந்தக்குழுவில் இணைக்கப்பட்டமை தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் எவ்வித தகவல்களையும் அறிந்திருக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.