.webp)
Colombo (News1st) சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த நாசாவின் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் இன்று பூமியை வந்தடைந்தனர்.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.30 க்கு இருவரும் பயணித்த SPACE-X டிராகன் விண்கலம் புளோரிடா மாநிலத்திற்கு அருகில் இறக்கப்பட்டது.
புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இலங்கை நேரப்படி நேற்று காலை 10.35க்கு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், 17 மணித்தியால பயணத்திற்குப் பின்னர் இன்று பூமியை வந்தடைந்தார்.
இந்த விண்கலம் வளிமண்டல மறு நுழைவு என அழைக்கப்படும் ஆபத்தான கட்டத்தைக் கடந்து பூமியை நோக்கி பயணித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பின்னர் பல்வேறு கட்டங்களாக பராசூட்கள் விரிக்கப்பட்டு அதன் வேகம் குறைக்கப்பட்டு ஸ்பிளாஷ் டவுன் (splashdown) என்ற முறையில் கடல்நீரில் இறக்கப்பட்டுள்ளது.
61 வயதான வில்மோர் 58 வயதான சுனிதா ஆகியோரை மீண்டும் பூமிக்கு அழைத்துவருவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா இணைந்து டிராகன் விண்கலத்தில் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யாவைச் சேர்ந்த 04 விண்வௌி வீரர்களை சர்வதேச விண்வௌி நிலையத்திற்கு கடந்த 14 ஆம் திகதி அனுப்பியிருந்தன.
இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரின் பணிகளை குறித்த 04 விஞ்ஞானிகளும் விண்வௌியில் தொடரவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
08 நாட்கள் ஆய்வுப் பணிக்காக கடந்த வருடம் ஜூன் மாதம் 05 ஆம் திகதி ஸ்டார்லைனர் விண்கலத்தினூடாக சென்ற இருவரும் விண்கலத்தில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறினால் 09 மாதங்களாக சர்வதேச விண்வௌி நிலையத்திலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவர்களை அழைத்துச் சென்ற ஸ்டார் லைனர் விண்கலம் மனிதர்களுடன் சென்ற போயிங்கின் முதல் விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.