.webp)
Colombo (1st) சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவது மீண்டும் தாமதமாகியுள்ளது.
விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு மாற்றீடாக மற்றுமொரு குழுவை அனுப்புவதற்கான முயற்சியை தொழில்நுட்ப கோளாறு காரணமாக SpaceX நிறுவனம் எதிர்வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்ப இன்னும் 2 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மற்றும் சர்வதேச விண்வெளி மையத்திற்கிடையே இணைப்பை ஏற்படுத்தி சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வௌி வீரர்களை பூமிக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் திகதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர்.
அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 10 நாள் பயணமாக விண்வெளிக்கு சென்ற இருவரும் அங்கு 9 மாதங்களாக சிக்கியுள்ளனர்.
இவர்களை பூமிக்கு மீள அழைத்து வருவதற்காக ஒத்திவைக்கப்பட்ட திட்டம், உரிய தினத்தில் முன்னெடுக்கப்பட்டால் இருவரும் எதிர்வரும் 19ஆம் திகதி பூமியை வந்தடைவார்கள் என நாசா தெரிவித்துள்ளது