மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை

by Staff Writer 11-03-2025 | 2:45 PM

Colombo (News 1st)  எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உயர் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ரோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ராமன்த ஜயமகவிற்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை இரத்துச்செய்து ஒரு மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்துமாறு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கான காரணங்களை முன்வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் ஜூன் 6ஆம் திகதி மகளிர் மற்றும் ஊடகங்கள் ஒன்றியம் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ரோயல் பார்க் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட முறைமையானது அரசியலமைப்பிற்கு முரணானது என குறிப்பிட்டு பொதுமன்னிப்பை வலுவிழக்கச்செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதன் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக வழக்கின் தீர்ப்பை வழங்கிய நீதியரசர்கள் குழாம் அறிவித்தது.

அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒருமாத காலத்திற்குள் ஒரு மில்லியன் ரூபா நட்டஈட்டு தொகையை செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று(11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, மைத்திரிபால சிறிசேனவால் இதுவரையில் குறித்த நட்டஈட்டு தொகை செலுத்தப்படவில்லை என தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நிதியைச் செலுத்த தவறியமைக்கான காரணத்தை மன்றில் விளக்குமாறும் குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உயர் நீதிமன்ற நீதியர்சர்கள் குழாம் அழைப்பாணை விடுத்துள்ளது.