.webp)
COLOMBO (News 1st) கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி (Mark Carney) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கனேடிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநராக செயற்பட்ட 59 வயதான மார்க் கார்னி, ஆளுங்கட்சியான லிபரல் கட்சியின் சார்பில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் புதிய பிரதமரை தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் மார்க் கார்னி 86 வீதமான வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
இந்த வாக்கொடுப்பில் சுமார் ஒரு இலட்சத்து 52 ஆயிரம் லிபரல் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்
மார்க் கார்னியின் பிரதான போட்டியாளராக நிதியமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் காணப்பட்டார்.
கனடாவுக்கு எதிராக அமெரிக்க வர்த்தக போரை அறிவித்துள்ள பின்புலத்தில் புதிய பிரதமர் தெரிவு இடம்பெற்றிருந்தது.
அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு எதிராக கனடா அனைத்து அமெரிக்க பொருட்கள் மீதும் விதித்திருந்த வரி தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பிரதமர் தெரிவின் பின்னர் உரையாற்றிய மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தங்களுக்கும் மரியாதை செலுத்தும் வரையில் இந்த வரிகள் அமுலில் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கனடா மீது விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், லிபரல் கட்சியை மீட்டெடுப்பதற்கும் தாமே சிறந்த நபர் என கனடாவின் புதிய மார்க் கார்னி முன்னர் தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதிக்கு முன்னர் கனடாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிய பிரதமர் மார்க் கார்னியின் தலைமையில் லிபரல் கட்சி தேர்தலை எதிர்க்கொள்ளவுள்ளது.
அரசியல் பின்புலம் இல்லாத நபரொருவர் கனடாவின் பிரதமராக பதவியேற்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
9 வருடங்களாக கனடாவின் பிரதமராக செயற்பட்ட ஜஸ்டின் ட்ரூடோ, சொந்த கட்சியின் அழுத்தத்தின் காரணமாக கடந்த ஜனவரி மாதம் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.