வடக்கின் பெருஞ் சமரில் சென்.ஜோன்ஸ் வெற்றி

118ஆவது வடக்கின் பெருஞ் சமரில் சென்.ஜோன்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி

by Rajalingam Thrisanno 08-03-2025 | 8:23 PM

Colombo (News 1st) யாழ். மத்திய கல்லூரிக்கு எதிராக 118ஆவது வடக்கின் பெருஞ் சமரில் சென்.ஜோன்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

யாழ். மத்திய கல்லூரி நிர்ணயித்த 93 ஓட்டங்கள் இலக்கை சென்.ஜோன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு கடந்தது.

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்றுமுன்தினம்(5) ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி 131 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அன்டன் நிரேஷான் அபிஷேக் 27 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றதுடன் அணித்தலைவர் ரஞ்சித்குமார் நிவ்டன், சதாகரன் சிமில்டன் ஆகியோர் தலா  24 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜெயச்சந்திரன் அஷ்நாத் 5 விக்கெட்டுகளையும், மர்பின் ரெண்டியோ, குகதாஸ் மாதுளன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் பதிலளித்தாடிய சென்.ஜோன்ஸ் அணி 181 ஓட்டங்களைக் குவித்து சவால் விடுத்தது.

ரேமன் அனுஷாந்த் 86 ஓட்டங்களை விளாச ஜெயச்சந்திரன் அஷ்நாத் 29 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ரஞ்சித்குமார் நியூட்டன் 5 விக்கெட்டுகளையும், முரளி திசோன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

50 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ். மத்திய கல்லூரி அணி வீரர்களால் மீண்டும் பிரகாசிக்க முடியவில்லை.

சுதாகரன் சிமில்டன் 34, தகுதாஸ் அபிலாஷ் 28 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க யாழ். மத்திய கல்லூரி அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 142 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.

ஜெயச்சந்திரன் அஷ்நாத் 3 விக்கெட்டுகளையும், குகதாஸ் மாதுளன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

வெற்றி இலக்கு 93 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட அந்த இலக்கை நோக்கி  பதிலளித்தாடிய சென்.ஜோன்ஸ் அணி ஓர் ஓட்டத்துக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்திற்குள்ளானது.

எனினும், உதயணன் அபிஜோய்ஷாந்த் 34 ஓட்டங்களையும், ஜெயச்சந்திரன் அஷ்நாத் 29 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர்.

முரளி திசோன், ரஞ்சித்குமார் நியூட்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வடக்கின் பெருஞ் சமர் வரலாற்றில் சென். ஜோன்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளதுடன் இது அவர்களுக்கு 40ஆவது வெற்றியாகும்.

யாழ். மத்திய கல்லூரி அணி 29 வெற்றிகளை பெற்றுள்ளதும் நினைவுகூரத்தக்கது. 

சிறந்த துடுப்பாட்ட வீரர் விருதை சென் ஜோன்ஸ் அணியின் ரேமன் அனுஷாந்தும் சிறந்த பந்துவீச்சாளர் விருதை ஜெயச்சந்திரன் அஷ்நாத்தும் வென்றனர்.

யாழ். மத்திய கல்லூரி அணியின் அன்டன் நிரோஷன் அபிஷேக் சிறந்த களத்தடுப்பாளராகத் தெரிவானார்.

யாழ். மத்திய கல்லூரியின் ரஞ்சித்குமார் நியூட்டன் சிறந்த சகலதுறை வீரர் விருதை தட்டிக்கொண்டார்.

சிறந்த விக்கெட் காப்பாளர் விருது சென்.ஜோன்ஸ் கல்லூரியின் கிருபாகரன் சஞ்சுதனுக்கு கிட்டியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது சென்.ஜோன்ஸ் அணியின் ஜெயச்சந்திரன் அஷ்நாத் வசமானது.