நாடளாவிய ரீதியில் வழமை போன்று எரிபொருள் விநியோகம்

நாடளாவிய ரீதியில் வழமை போன்று எரிபொருள் விநியோகம் - இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

by Staff Writer 02-03-2025 | 2:49 PM

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் தடையின்றி விநியோகிக்கப்படுவதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.A.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

நாளை(03) மற்றும் நாளை மறுதினத்திற்கு(04) தேவையான எரிபொருளை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றின் உரியமையாளர்கள், பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக வௌியான தகவல்களை அடுத்து நேற்று முன்தினம் முதல் ஒருதரப்பினர் எரிபொருள் வரிசைகளில் நிற்பதை காணக்கூடியதாக இருந்தது.

எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3 வீத கழிவுக் கொடுப்பனவை இரத்துச்செய்யும் நடைமுறை நேற்று(01) முதல் அமுலுக்கு வந்தது.

எவ்வாறாயினும் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இன்று எரிபொருள் வரிசைகளை காண முடியவில்லை என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழமை போன்று எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

நாட்டில் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் இன்று(02) காலை அறிக்கை வௌியிடப்பட்டது.

அதற்கமைய 66,188 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசலும் 

9444 மெட்ரிக் தொன் சுப்பர் டீசலும் தற்போது கையிருப்பில் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

87180 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 ரக பெட்ரோல், 13767 மெட்ரிக் தொன் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் கையிருப்பில் உள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே 7 நாட்களுக்குள் 4626 மெட்ரிக் டொன் ஒட்டோ டீசலும்

111 மெட்ரிக் தொன் லங்கா சுப்பர் டீசலும் 3806 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 ரக பெட்ரோலும் 119 மெட்ரிக் தொன் ஒக்டேன் 95 ரக பெட்ரோலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்