.webp)
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கம் சந்தியில் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் மீது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மணல் கொண்டுசெல்லும் டிப்பரில் கஞ்சா கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பருத்தித்துறை - திக்கம் சந்தி வீதித்தடையில் சோதனை நடவடிக்கையை முன்னெடுக்க பொலிஸார் முற்பட்ட போது குறித்த டிப்பர் கட்டளையை மீறி தப்பிச்சென்றுள்ளது.
பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் டிப்பரை பின்தொடர்ந்து சென்ற நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது டிப்பரின் சாரதியும் உதவியாளரும் தப்பியோடியுள்ளனர்.
டிப்பரை சோதனைக்குட்படுத்திய போது சந்தேகநபர்கள் அமர்ந்திருந்த முன் இருக்கையின் ஒரு பகுதியில் கஞ்சா காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் துப்பாக்கிச்சூட்டு காயத்துடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் அங்கு விரைந்தனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர், குறித்த டிப்பரிலிருந்து தப்பியோடிய உதவியாளர் என்பது இதன்போது தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி தர்மபுரத்தைச் சேர்ந்த 19 வயதான குறித்த இளைஞன் தற்போது பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்தேகநபர்கள் அனுமதிப்பத்திரமின்றி மணல் கடத்தலை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தப்பிச்சென்ற டிப்பரின் சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.