.webp)
Colombo (News 1st) சிவபெருமானுக்காக இந்துக்கள் அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி விரதம் இன்றாகும்.
வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
மாசி மாத கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி திதியன்று விரதமிருந்து சிவனை வேண்டி இரவு முழுவதும் விழித்து 4 ஜாமப்பூஜைகள் செய்வது மகா சிவராத்திரியின் முக்கியமான வழிபாட்டு முறைமையாகும்.
இந்த நன்னாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னொரு காலத்தில் மமதையால் கட்டுண்ட படைத்தல் கடவுளான பிரம்மாவும் காத்தல் கடவுளான விஷ்ணுவும் தம்முள் யார் பெரியவர் எனும் கேள்விக்கான விடையைக் காணத் தலைப்பட்டனர்.
அறியாமையினால் மூழ்கிய இரு மூர்த்திகளின் சிந்தையை தெளிவிக்க நினைத்த திருமூர்த்தியான எம்பெருமான் திருவுளம்கொண்டு ஜோதிப் பிழம்பாய் அவர்கள் முன் காட்சி கொடுத்தார்.
மகா சிவராத்திரி தினத்தில் நடுநிசியில் நள்ளிரவு 12 மணிக்கு இறைவன் ஜோதி வடிவமாக தோன்றிய நேரம் இலிங்கோற்பவ காலமாகும்.
சிவராத்திரியன்று சிவ வழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது ஐதீகம்.
மகா சிவராத்திரி விரதம் இருப்பதால் பாவங்கள நீங்கிப்போகும் என்பது இந்துக்களில் நம்பிக்கையாகும்.
24 வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள் என்பதுடன், அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடையலாம் எனவும் புராணங்கள் கூறுகின்றன.
சிவராத்திரி என்பது உலகிலும் வாழ்விலும் "மாயை இருளை" வெற்றிகொள்ளவதை குறிக்கின்ற அதேவேளை வாழ்வில் சுபீட்சம் கிட்ட பிரார்த்தனைகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க செய்தியில் தெரிவித்துள்ளார்.
அனைவரும் கோரும் நல்லதொரு அரசியல் கலாசாரத்துடன் கூடிய வளமான நாட்டை கட்டியெழுப்பும் பல புதிய அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்கள் பலவற்றுடன் தற்போது மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, மகா சிவராத்திரி தினத்தில் ஒளிரச்செய்யப்படும் விளக்குகளின் ஒளியால் ஒருமித்த மனங்களுடன் நாம் தேர்ந்தெடுத்த பாதையை மென்மேலும் ஔிரச்செய்ய ஒன்றிணையுமாறும் நாட்டுமக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே நற்பண்புகளின் அடிப்படையில் நாம் ஒரு நாடாகச் செயற்பட்டால் இருள் நீங்கி ஞான ஒளியுடன் தற்போதுள்ள வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு அமைதி, வளம், நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்த முடியும் என எதிர்க்கட்சி தலைவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
இது நாட்டின் எதிர்காலத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை எனவும் பல மதங்கள், பல இனங்கள் கொண்ட நாடாக இன, மத, கலாசார மற்றும் பன்முகத்தன்மையின் அழகையும் மதிப்பையும் அங்கீகரிப்பதற்கு இந்த நாளில் நாம் மறந்துவிடக் கூடாதெனவும் சஜித் பிதேமதாச தெரிவித்துள்ளார்.