.webp)
Colombo (News 1st) மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்ட அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையை வரவேற்கும் நிகழ்வும் புதிய ஆயரின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வும் இன்று(23) இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை நேற்று(22) அருட்பொழிவு செய்யப்பட்டார்.
அதிகளவான இறைமக்கள் புடைசூழ புதிய ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மன்னார் மாவட்டத்தின் தள்ளாடியிலிருந்து புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு மோட்டார் வாகன பவனியாக அழைத்து வரப்பட்டார்.
திருப்பலி ஆரம்பமானதைத் தொடர்ந்து மன்னார் மறைமாவட்டத்தின் குரு முதல்வர் பி.கிறிஸ்துநாயகம் அடிகளாரால் திருத்தூது மடல் வாசிக்கப்பட்டது.
பேரருட்தந்தை இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையால் புதிய ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையிடம் புனித செபஸ்தியார் பேராலயத் திறவுகோல் வழங்கப்பட்டது.
தொடர்ந்து புனித செபஸ்தியார் பேராலயத்தின் பங்குத்தந்தையால் நற்கருணை பேழைக்கான திறவுகோல் வழங்கப்பட்டது.
பின்னர் பேரருட்தந்தை இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையால் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையிடம் செங்கோல் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து புதிய ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.