.webp)
Colombo (News 1st) பெருந்தோட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் பிரத்தியேக முகவரிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி கூறினார்.
தற்போது பெருந்தோட்டங்களில் 260,000 மேற்பட்ட தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பாக தபால் திணைக்களத்துடன் கலந்துரையாடி அவர்களுக்கான பிரத்தியேக முகவரிகளை தயாரித்து முடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரத்தியேக முகவரி இன்மையினால் வங்கி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு சுட்டிக்காட்டியது.
பெருந்தோட்ட மக்களுக்கும் ஏனைய மக்களை போன்று அடையாளம் உள்ளதென அமைச்சின் செயலாளர் வலியுறுத்தினார்.
அதனை பாதுகாக்கும் வகையிலேயே அவர்களுக்கான முகவரிகளை வழங்கி சமூகத்தில் அவர்களை மேம்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.