பிரமிட் திட்ட நிதி மோசடி சந்தேகநபர் விளக்கமறியலில்

பிரமிட் திட்ட நிதி மோசடி சந்தேகநபர் மார்ச் 7 வரை விளக்கமறியலில்

by Staff Writer 21-02-2025 | 7:06 PM

Colombo (News 1st) ONMAX DT எனப்படும் பிரமிட் திட்ட நிதி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை அடுத்த மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் துபாயில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட பிரதான சந்தேகநபர் இன்று(21) பிற்பகல் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ONMAX DT எனப்படும் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான இணையத்தளத்தை உருவாக்கி சந்தேகநபர் பாரியளவிலான நிதியை கையகப்படுத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இதன்போது மன்றில் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சந்தேகநபர் இதனூடாக எவ்வித இலாபத்தையும் ஈட்டவில்லை என பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறினார்.

சந்தேகநபர் உயிர் அச்சுறுத்தலால் வௌிநாட்டில் இருந்ததாகவும் அவர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாகவும் சட்டத்தரணி மன்றில் குறிப்பிட்டார்.

விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதவான் பிணை கோரிக்கையை நிராகரித்து சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவையும் பிறப்பித்தார்.