விசாரணை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தொடர்பான விசாரணைகளை நீதிமன்றுக்கு அப்பால் முன்னெடுக்க திட்டம்

by Staff Writer 20-02-2025 | 7:24 AM

Colombo (News 1st) பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு அப்பால் முன்னெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து நீதி அமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நேற்று(19) கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனை கூறினார்.

நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் ​​உரிய நடைமுறைகளுக்கமைய பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு அனுமதியில்லை எனவும் உட்பிரவேசிக்கும் சட்டத்தரணிகள் சோதனைக்குட்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

புலனாய்வு பிரிவினர் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு திட்டங்களை பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றைய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேநேரம் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையினால் ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.