டொனால்ட் ட்ரம்புக்கு மோடி அளித்த உறுதிமொழி

சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்துக்கொள்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதி

by Staff Writer 14-02-2025 | 8:25 PM

Colombo (News 1st) சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்துக்கொள்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

அத்துடன், ஆட்கடத்தலை முற்றாக ஒழிக்க வேண்டும் எனவும் பாரதப் பிரதமர் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான ஒன்றிணைந்த ஊடக சந்திப்பில் மோடி இதனை குறிப்பிட்டார்.

2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய பிரதமர் வௌ்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை இன்று(14) சந்தித்தார்.

டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இருவரும் சந்தித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

ஊடக சந்திப்பிற்கு முன்பு ஓவல் அலுவலகத்தில் இரண்டு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தைவிட இம்முறை இரு மடங்காக இருநாடுகளும் ஒன்றிணைந்து செயற்படும் என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது தொழிலதிபர் ஈலோன் மஸ்க், அமெரிக்க இராஜாங்க செயலாளர் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடல்களை தொடர்ந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், பிரதமர் நரேந்திர மோடியும் ஊடக சந்திப்பில் பங்கேற்றனர்.

ஊடக சந்திப்பில், வரிவிதிப்பு மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை(Tahawwur Rana) நாடு கடத்துதல், சட்டவிரோத குடியேற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்தியா நடுநிலையாக இன்றி அமைதியின் பக்கம் நிற்பதாக மோடி தெரிவித்துள்ளார்.

யுக்ரேன் - ரஷ்ய யுத்தத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மும்பை தாக்குதல் குற்றவாளியான தஹாவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கும் டொனால்ட் ட்ரம்ப் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இந்தியாவிற்கு வருகை தருமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமெரிக்காவிடமிருந்து மேலும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி சிறந்த தலைவர் என வர்ணித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி அவரின் செயல்கள் தொடர்பில் அனைவரும் பாராட்டு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்தியாவிற்கான இராணுவ தளபாட விற்பனையை மில்லியன் கணக்கான டொலர்களால் அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.

இதேவேளை, மிகப்பெரிய செல்வந்தரும் அமெரிக்க DOGE அமைப்பின் பிரதானியுமான ஈலோன் மஸ்க்கையும் பிரதமர் மோடி வௌ்ளை மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்திய - அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் விவேக் ராமசாமியும் மோடியை சந்தித்துள்ளார்.

மேலும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு செயலாளர் மைக்கேல் வால்ட்ஸுடனும் (Michael Waltz) இரு தரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.