நாளை(13) மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா?

நாளை(13) மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா?

by Staff Writer 12-02-2025 | 2:47 PM

Colombo (News 1st) திட்டமிடப்பட்டவாறு நாளை(13) மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று(12) மாலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சார சபையின் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 மின்பிறப்பாக்கிகளின் செயற்பாடுகள் வழமைக்கு கொண்டுவரப்படவில்லை.

இதனால் தேசிய கட்டமைப்பிற்கு சுமார் 900 மெகாவாட் மின்சார இழப்பு ஏற்படுகிறது.

தற்போது ​​நீர் மின்னுற்பத்தி 30 வீதமாக காணப்படுகின்ற நிலையில், நீர் முகாமைத்துவத்தின் ஊடாக மின்விநியோகத்தை முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை(09) நாடாளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை தொடர்பில் முழுமையான அறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

குறித்த அறிக்கை கிடைத்ததன் பின்னர் அதனை ஆய்வு செய்து மீண்டும் அவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடைமுறைகள் தொடர்பில் பரீசிலிக்கவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் லலித் சந்திரலால் தெரிவித்துள்ளார்.