யோஷிதவிற்கு எதிராக வழக்கு

யோஷிதவிற்கு எதிராக நிதித் தூய்தாக்கல் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு

by Rajalingam Thrisanno 11-02-2025 | 1:34 PM

Colombo (News 1st) நிதித் தூய்தாக்கல் தடைச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஸவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று(11) முற்பகல் நடைபெற்ற ஊடகசந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை கூறினார்.

யோஷித்த ராஜபக்ஸவிற்கு எதிராக 2016 ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் யோஷிதவின் வங்கிக் கணக்கிலிருந்த 59 மில்லியன் ரூபா தொடர்பாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறினார்.

இந்த நிதியை எவ்வாறு பெற்றார் என அவர் இதுவரையில் தெளிவுபடுத்தவில்லை எனவும் அதற்கமைய நிதித் தூய்தாக்கல் தடைச் சட்டத்தின்கீழ் அவருக்கு எதிராக விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

டேசி பொரஸ்ட் என்பவருக்கு சொந்தமான வங்கிக் கணக்கிலும் அவர் இந்த நிதியை சேமித்து வைத்திருந்தமை விசாரணைகளூடாக அறியக்கிடைத்ததாகவும் டேசி பொரஸ்ட் என்ற பெண்ணையும் சந்தேகநபராக பெயரிடுமாறு சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

யோஷித ராஜபக்ஸவுக்கு எதிராகவும் டேஷி பொரஸ்ட்டுக்கு எதிராகவும்  கடுவலை நீதிமன்றத்தில் யோசனைகளை இலங்கை பொலிஸார் பெற்றதாகவும் குறித்த பெண்ணுக்கு எதிராக வெளிநாட்டு தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.