Colombo (News 1st) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கான விஜயத்தின் 2ஆம் நாள் இன்றாகும்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, மாஸ்டர் இன்வெஸ்ட்மென்ட் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷேக் அப்துல்லா பின் முஹம்மது அல் காசிமை நேற்று(10) சந்தித்தார்.
இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கும் இடையிலான பொருளாதார மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விஜயத்தில் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க துபாயில் நடைபெறும் 2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் உரையாற்றவுள்ளார்.
எதிர்காலத் திட்டங்கள், தொழில்நுட்ப புத்தாக்கம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தும் கருத்தாடலை ஏற்படுத்துவதற்காக உலகத் தலைவர்களை ஒரே மேடையில் அமர்த்துவதே உலகத் தலைவர்கள் மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.
இந்த மாநாட்டில் மனித சமூகம் தற்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்கால முன்னேற்றங்கள், புதிய வாய்ப்புகள் தொடர்பில் நாடுகளுக்கிடையில் கருத்துப் பகிர்வு என்பன முன்னெடுக்கப்படவுள்ளன.
இதில் 150 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 4000இற்கும் அதிகமானவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் பல நாட்டுத் தலைவர்கள், அரசாங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மற்றும் துணைஜனாதிபதி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கான விஜயத்தை நிறைவுசெய்து எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி நாடு திரும்புவாரென வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.