Colombo (News 1st) முறையான மதிப்பீடின்றி தமது பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 19ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(06) திகதியிட்டுள்ளது.
ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவரடங்கிய நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மனுவுடன் தொடர்புடைய பிரதிவாதிகளுடன் கலந்தாலோசிக்க கால அவகாசம் தேவைப்படுவதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வருணிகா ஹெட்டிகே மன்றில் தெரிவித்தார்.
அத்துடன் மனு மீதான ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கும் கால அவகாசம் வழங்குமாறு அவர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அதற்கிணங்க, விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு பிரதிவாதிகளுக்கு அனுமதி வழங்கி தேவையேற்படின் மனுதாரர்களும் தமது ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும் என உத்தரவிட்டது.
எவ்வித பாதுகாப்பு மதிப்பீடுமின்றி தமது சேவைபெறுநரின் பாதுகாப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனுதாரரான மஹிந்த ராஜபக்ஸ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி நீதிமன்றத்தில் வாதிட்டார்.
முறையான பாதுகாப்பு மதிப்பீட்டின் பின்னரே அவரது பாதுகாப்பைக் குறைப்பது அல்லது அதிகரிப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் வலியுறுத்தினார்.
அதற்கமைய, முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை உறுதி செய்வதற்காக இந்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 19ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள திகதியிட்டது.