![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) அரச நிறுவனங்களில் பணிபுரியும் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு ரமழான் காலத்தில் விசேட விடுமுறை வழங்குமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றிக்கை வௌியிட்டுள்ளது.
அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்களுக்கு இந்த சுற்றுநிருபம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள ரமழான் மாதம், மார்ச் 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு தொழுகையிலும் மதவழிபாடுகளிலும் கலந்துகொள்ளக்கூடிய வகையில் ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அதிகாலை 3.30 முதல் 6 மணி வரையும் பிற்பகல் 3.15 முதல் 4.15 வரையும் மாலை 6 மணி முதல் 7 மணி வரையும் மாலை 7.30 முதல் இரவு 10.30 வரையும் விசேட விடுமுறையை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரமழான் பண்டிகைக்கு 14 நாட்களுக்கு முன்னதாக அரச சேவை கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகளில் பணிபுரியும் தகைமையுடைய முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு பண்டிகை முற்பணம் வழங்குமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கோரியுள்ளது.