Colombo (News 1st) ஹினிதுமயில் இடம்பெற்ற முக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பூரண கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலைச்சம்பவம் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ஹினிதும மஹாபோதிவத்த பகுதியில் கைவிடப்பட்ட விடுதியொன்றில் கடந்த 30ஆம் திகதி இரவு இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றது.
முன்னாள் அமைச்சர் ஒருவரின் செயலாளர் என கூறப்படும் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட வௌிநாட்டு தொழில்வாய்ப்பு மோசடி தொடர்பில் ஏற்பட்ட தகராறை அடிப்படையாகக் கொண்டே இந்த மோதல் இடம்பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பனங்கல மஹாபோதிவத்தையைச் சேர்ந்த 55 வயதான விடுதியின் உரிமையாளர், ஹினிதும நெவதிமுல்லை பகுதியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அம்பலன்கொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகினர்.
இவ்வாறு உயிரிழந்த மூவரில் அம்பலாங்கொடையைச் சேர்ந்த நெவில் என்பவர் தாம் வெளிநாடு செல்லும் நோக்கில் 15 இலட்சம் ரூபாவையும் அவரின் சகோதரரை வௌிநாட்டுக்கு அனுப்பும் நோக்கில் 13 இலட்சம் ரூபாவையும் விடுதியின் உரிமையாளர் ஊடாக பிறிதொருவருக்கு வழங்கியுள்ளமை தொலைபேசி தரவுகள் உள்ளிட்ட பகுப்பாய்வு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட குற்றவாளிகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.