Colombo (News 1st) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் துறையில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வுகளைக் கண்டறிய 3 அமைச்சுசார் உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரில் நடைபெற்ற முதலாவது அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்ற போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இந்த ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
போக்குவரத்து தொழிற்துறையிலுள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முதலாவது உப குழு நியமிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் விதான, திணிந்து சமன், தேவானந்த சுரவீர ஆகியோர் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்துத்துறை சம்பந்தமான சட்டரீதியான கட்டமைப்பை வலுப்படுத்தி வழிநடத்துதல் தொடர்பில் மற்றுமொரு உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான லக்மாலி ஹேமச்சந்திர, சுகத் வசந்த டி சில்வா, தனுர திஸாநாயக்க, சுஜீவ திசாநாயக்க இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய மேலதிக சேவைகளை உருவாக்குவதன் மூலம் வருமானம் ஈட்டுவதை நோக்காகக் கொண்டு மூன்றாவது உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீந்திர பண்டார மற்றும் தனுஷ்க ரங்கநாத் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.