பொலிஸார் முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு

ஜனாதிபதியின் விஜயத்தின் போது ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்த தடை விதித்து உத்தரவிடுமாறு கோரி பொலிஸார் முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு

by Staff Writer 30-01-2025 | 10:58 PM

Colombo (News 1st) ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்த தடை விதித்து உத்தரவிடுமாறு கோரி  பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஜனாதிபதியின் யாழ்ப்பாண  விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என சந்தேகிக்கப்படும் சிலருக்கு எதிராக பொலிஸாரால் முறைப்பாடு செய்யப்பட்ட வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தலைவர் சர்வானந்தசிவம் சசிகரன், ஆர்ப்பாட்ட குழுவின் யாழ். மாவட்ட தலைவர் பொன்ராஜா பிறேம் டக்ளஸ் பிரபாகரன், தற்காலிக சுகாதார உத்தியோகத்தர் சங்கத்தலைவர் எஸ். ஜெஸ்மின்,  குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் தவிர்ந்த ஏனைய தரப்பினர் தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை என நீதிமன்றதில் உறுதியளித்துள்ளனர்.

வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் தாம் ஜனாதிபதியின் உயர் பாதுகாப்பு வலயத்திற்கு வௌியே அவருக்கு தெரியக்கூடிய வகையில் பதாகைகளைத் தாங்கியிருக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய அமைதியான முறையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் செயற்படுமாறு யாழ்ப்பாணம் நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.