(Colombo News1st) இலங்கை மண்ணில் இரட்டை சதமடித்த முதல் அவுஸ்திரேலியராக உஸ்மான் கவாஜா வரலாற்றில் பதிவானார்.
காலியில் நடைபெறும் வோர்ன் - முரளி கிண்ண டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இரண்டாம் நாளான இன்று(30) அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.
8 மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடிய கவாஜா 352 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் 16 பௌண்டரிகளுடன் 232 ஓட்டங்களைக் குவித்தார்.
இதன் போது அவர் ஸ்டீவன் ஸ்மித்துடன் இணைந்து 3ஆம் விக்கெட்டுக்காக 266 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 141 ஓட்டங்களைப் பெற்றார்.
அறிமுக வீரரான ஜொஸ் இங்லிஸ் சதமடித்த அசத்தியதுடன் இதன் மூலம் அறிமுக டெஸ்டில் சதமடித்து 21ஆவது அவுஸ்திரேலியராகப் பதிவானார்.
94 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்ஸர், 10 பௌண்டரிகளுடன் 102 ஓட்டங்களைப் பெற்றார்.
அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 654 ஓட்டங்களைக் குவித்து முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.
பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய, ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸில் பதிலளித்தாடும் இலங்கை அணி ஆரம்பத்திலேயே தடுமாற்றத்திற்குள்ளானது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஓஷத பெர்னாண்டோ இரண்டாவது ஓவரிலும் திமுத் கருணாரத்ன 4ஆவது ஓவரிலும் ஏஞ்சலோ மெத்யூஸ் 10ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர்.
இவர்கள் மூவருமே தலா 7 ஓட்டங்களைத் தான் பெற்றார்கள் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
எவ்வாறாயினும், டினேஷ் சந்திமாலுக்கு இன்று அதிர்ஷ்டம் 2 சந்தர்ப்பங்களில் கைகொடுத்தது.
அவர் 5 ஓட்டங்களுடன் இருந்த போது கொடுத்த இலகுவான பிடியை 'கலி'யில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த மேலதிக வீரரான நதன் மெக்ஸ்வினி தவறவிட்டதுடன் நதன் லயனின் பந்துவீச்சில் போல்டாகியும் விக்கெட்டிலிருந்து 'பேல்ஸ்' விழாத காரணத்தால் டினேஷ் சந்திமால் ஆட்டமிழப்பிலிருந்து தப்பிப் பிழைத்தார்.
டினேஷ் சந்திமாலும் 9 ஓட்டங்களுடனும் கமிந்து மென்டிஸ 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 44 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய 2ஆம் நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.
இலங்கை அணி மேலும் 610 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளதுடன் பலோ ஒன்னில் 2ஆம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடுவதை தவிர்க்கும் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.