Colombo (News 1st) முல்லைத்தீவு மாங்குளம் - மதகுவைத்தகுளம் பகுதியில் நாயொன்று கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாங்குளம் மதகுவைத்தகுளம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரான பெண்ணின் ஆடுகளை அயல்வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் கடித்தமை தொடர்பில் நீண்ட காலமாக தகராறு நிலவி வந்துள்ளது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தமது ஆட்டை குறித்த நாய் கடித்து கொன்றுள்ளதாக சந்தேகநபரான பெண் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு இணக்கச்சபைக்கு மாற்றப்பட்டு கடந்த 25ஆம் திகதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது இருதரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டு நாயின் உரிமையாளர் அதனை ஆட்டின் உரிமையாளரான பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.
இவ்வாறு கையளிக்கப்பட்ட நாயின் கழுத்து கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டிருந்தன.
இந்த புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு மாங்குளம் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவியல் சட்டம் மற்றும் மிருகவதைத் தடுப்புக் கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் மதகுவைத்தகுளம் பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெண் இன்று(27) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பெண் மாங்குளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நாயின் உடலை தோண்டியெடுத்து உடற்கூற்றுப் பரிசோதனை செய்யவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.