Colombo (News 1st) சூரிய குடும்பத்தின் 6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை சில தினங்களுக்கு பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களை இவ்வாறு பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் பிரிவின் வானியல், விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
வௌ்ளி, சனி, வியாழன், செவ்வாய் ஆகிய கோள்கள் வெற்றுக்கண்களால் அவதானிக்கக் கூடியவாறு பிரகாசமாக தென்படும் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்களை தொலைநோக்கியினுடாக பார்வையிடுவதற்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக பேராசிரியர் கூறினார்.
எதிர்வரும் 29ஆம் திகதி வரை சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் 90 நிமிடங்களுக்கு கோள்களை இவ்வாறு பார்வையிட முடியும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.