Colombo (News 1st) யோஷித ராஜபக்ஸ எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புதுக்கடை நீதவான் முன்னிலையில் இன்று(25) மாலை அவர் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
யோஷித ராஜபக்ஸ முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில் பெலியத்தையில் வைத்து இன்று(25) காலை கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து யோஷித ராஜபக்ஸ கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது.
சட்ட விரோதமாக ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் 34 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி இரத்மலானை பகுதியில் காணியொன்றை கொள்வனவு செய்தமை தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க கூறினார்.
2006 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க நிதி தூய்தாக்கல் தடைச் சட்டத்தின் கீழ் குறிப்பிடக்கூடிய குற்றங்களை அவர் இழைத்துள்ளமைக்கான சாட்சியங்கள் காணப்படுவதால் சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவைக்கு அமைவாக யோஷித ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.