தேர்தல் வழக்குகளுக்காக தனியான நீதிமன்ற கட்டமைப்பு

தேர்தல் வழக்குகளுக்காக தனியான நீதிமன்ற கட்டமைப்பை கோரும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

by Staff Writer 25-01-2025 | 8:40 PM

Colombo (News 1st) தேர்தல் தொடர்பான வழக்குகளுக்காக தனியான நீதிமன்ற கட்டமைப்பை கோரியுள்ளதாக தேர்தல்கள்  ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவிக்கிறார்.

வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகளை இதன்மூலம் இலகுபடுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.

வழக்கு தாக்கல் செய்யும் அதிகாரம் தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை என அவர் கூறினார்.

தொழில் திணைக்களம், வனப்பாதுகாப்பு திணைக்களம் போன்றவற்றுக்கு இருப்பதைப் போல தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் வழக்குத் தாக்க செய்யும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள்  ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தினார்.

தேர்தலொன்றின் போது இழைக்கப்படும் குற்றம் தொடர்பாக அடுத்த தேர்தலுக்கு முன்னரேனும் தண்டனை வழங்கப்படாத பட்சத்தில் மக்கள் நம்பிக்கை இழப்பர் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக தொழில் நீதிமன்றத்தைப் போன்று  நீதிமன்ற கட்டமைப்பிற்குள் தேர்தல் வழக்குகளை கையாள்வதற்கான பிரத்தியேக இடம் வழங்கப்படுமாயின் சிக்கல்களை தீர்க்க முடியும் என தேர்தல்கள்  ஆணையாளர் நாயகம் மேலும் கூறினார்.