குருதி சுத்திகரிப்பு தொகுதி மக்களிடம் கையளிப்பு

ஆனமடுவ ஆதார வைத்தியசாலையின் குருதி சுத்திகரிப்பு தொகுதி புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயனடையும் வகையில் கையளிப்பு

by Staff Writer 24-01-2025 | 7:39 PM

Colombo (News 1st) புத்தளம் ஆனமடுவ ஆதார வைத்தியசாலையின் குருதி சுத்திகரிப்பு தொகுதி புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயனடையும் வகையில் கையளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ தர கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டடம், வைத்தியசாலைக்கு அவசியமான மருத்துவ உபகரணங்கள் இதன்போது மக்களிடம் கையளிக்கப்பட்டன. 

இது கம்மெத்தவின் மற்றுமொரு சமூகப் பணியாகும்.

பல நோயாளகளுக்கு புத்துயிரளிப்பதில் புத்தளம் மாவட்டத்திலுள்ள ஆனமடுவ ஆதார வைத்தியசாலை பெரும் பங்காற்றுகின்றது.

ஆனமடுவ உள்ளிட்ட ஏனைய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 400 முதல் 500 நோயாளர்கள் வரை சிகிச்சைகளைப் பெறுவதற்காக இந்த வைத்தியசாலைக்கு நாளாந்தம் வருகை தருகின்றனர்.

எனினும், சில குறைபாடுகளுடனேயே குறித்த வைத்தியசாலை இயங்குகின்றது.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளர்கள் இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.

எனினும், வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவும் வைத்தியசாலையின் குருதி சுத்திகரிப்பு தொகுதியும் செயலிழந்திருந்தன.

இந்நிலையில் ஆனமடுவ ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் கம்மெத்தவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குருதி சுத்திகரிப்பு தொகுதியை புதுப்பிக்கவும் வைத்தியசாலைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கவும் மருத்துவ தர கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டடத்தை நிர்மாணிக்கவும் கம்மெத்த நடவடிக்கை எடுத்தது.

கடந்த ஆண்டு ஜூன் 19ஆம் திகதி இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு நெக்ஸ்ட் மெனுபெக்ச்சரிங் நிறுவனம் கம்மெத்தவுடன் கைகோர்த்தது.

இன்றைய நிகழ்வில் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப்பணிப்பாளர், கம்மெத்த தலைவர் ஷெவான் டெனியல், நெக்ஸ்ட் மெனுபெக்ச்சரிங் தனியார் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு பணிப்பாளர் டேவிட் ரே, ஆனமடுவ பிரதேச செயலாளர் நிர்மலா விஜேதுங்க, வடமேல் மாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் இந்திக்க விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.