Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதியாக டொனல்ட் ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சீன ஜனாதிபதி ஷி ஜிம்பிங் ஆகியோர் காணொளி வாயிலாக கலந்துரையாடியுள்ளனர்.
இருநாட்டு உறவை அதிகரிப்பது தொடர்பில் இரு தலைவர்களும் உறுதி கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
நம்பிக்கை, ஒத்துழைப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டுமென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
மூலோபாய ஒருங்கிணைப்பை விரிவுப்படுத்துவதற்கும் பரஸ்பர ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்கும் தாம் ரஷ்யாவுக்கு அழைப்பு விடுப்பதாக இந்த கலந்துரையாடலில் சீன ஜனாதிபதி ஷி ஜிம்பிங் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற டொனல்ட் ட்ரம்ப் யுக்ரேன் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியதுடன் மறுக்கும் பட்சத்தில் ரஷ்யா மீது பல தடையுத்தரவுகள் விதிக்கப்படுமென அறிவித்தார்.
அத்துடன், சீனா தொடர்பிலும் அச்சுறுத்தலான கருத்துக்களை ட்ரம்ப் நேற்று(21) முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் கலந்துரையாடி புதிய ஒத்துழைப்பு உறவை ஏற்படுத்த தயாராகவுள்ளதாக சீன மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள் தெரிவித்துள்ள நிலையிலே இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.