Colombo (News 1st) எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் பக்தர்களின் நுகர்வுக்காக சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை இம்முறை நன்கொடையாக வழங்கியுள்ளது.
பேரீச்சம்பழங்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் கூறினார்.
அவற்றை பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
இம்முறை ஹஜ் கடமைக்காக 3,500 இலங்கையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கமும் சவுதி அரசாங்கமும் அண்மையில் கையெழுத்திட்டதாக
தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.
இதற்கமைய எதிர்வரும் ஜூன் முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ள யாத்ரீகர்கள் ஹஜ் கடமையை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி வழங்கப்பட்டுள்ள ஹஜ் யாத்ரீகர்களுக்கான சகல வசதிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் கூறியுள்ளார்.