19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி வெற்றி

19 வயதுக்குட்பட்ட இருபதுக்கு 20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி வெற்றி

by Staff Writer 21-01-2025 | 7:24 PM

Colombo (News 1st) 19 வயதுக்குட்பட்ட இருபதுக்கு 20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் வெற்றிப் பயணம் தொடர்கின்றது.

இலங்கை மகளிர் தனது 2ஆவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியை எதிர்கொண்டது.

மலேஷியாவின் கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை மகளிர் 81 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி சார்பாக சஞ்சனா காவிந்தி, சுமுது நிஸங்சலா ஆகியோர் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

முதல் விக்கட் 54 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டதுடன் சுமுது நிஸங்சலா 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

சஞ்சனா காவிந்தி 38 ஓட்டங்களையும் அணித்தலைவி மனுதி நாணாயக்கார 37 ஓட்டங்களையும் தஹமி சனெத்மா 31 ஓட்டங்களையும் பெற்றனர். 

இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 05 விக்கட் இழப்பிற்கு 166 ஓட்டங்களைக் குவித்தது.

வெற்றி இலக்கான 167 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியின் முதல் 03 விக்கட்டுக்களும் 36 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

அசேனி தலகுணே மற்றும் லிமங்ஸா திலகரத்ன ஆகியோர் தலா 02 விக்கட்டுக்களை கைப்பற்றினர்.

மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியால் 19 தசம் 4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

போட்டியின் சிறந்த வீராங்கனையாக சமுதி ப்ரபோதா தெரிவானார்.