Colombo (News 1st) வடக்கு, வட மத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்து நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறித்த பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு மலைச்சரிவுகளிலும் வடக்கு, வட மத்திய, கிழக்கு, கிழக்கு, வட மேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பலத்த மழையுடனான வானிலையால் மல்வத்து ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளான வெங்கலச்செட்டிக்குளம், மடு, முசலி, நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் கூறியுள்ளது.
வௌ்ள நிலைமை தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் வௌியிட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாச்சாதுவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் செக்கனுக்கு 3,700 கன அடி நீர் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்திற்கு விடுவிக்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கல் ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, அம்பாறை, தமன, எராகம, மடுல்ல, நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த ஆற்றை அண்மித்து தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பலத்த மழையுடன் கூடிய வானிலையால் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தால் பதுளை, கண்டி, குருணாகல், மாத்தளை மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலகப் பிரிவுக்கும் மாத்தளை மாவட்டத்தின் யட்டவத்த, உக்குவெல, இரத்தோட்டை, வில்கமுவ பிரதேச செயலக பிரிவுகளுக்கும் 2ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.