மத்தளை குத்தகை விவகாரம் தொடர்பில் மீளவும் ஆய்வு

மத்தளை விமான சேவை செயற்பாடுகளை குத்தகைக்கு வழங்கும் தீர்மானம் தொடர்பில் மீளவும் ஆய்வு

by Staff Writer 17-01-2025 | 6:07 PM

Colombo (News 1st) மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகளை இரண்டு இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் மீண்டும் ஆராய்வதற்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளை ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்ட இந்திய நிறுவனம் தற்போது அமெரிக்காவினால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலைமையின் கீழ் விமான நிலையத்தின் செயற்பாடுகளை அந்த நிறுவனத்திடம் ஒப்படைப்பது சிக்கலாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடவடிக்கைகளின் இலாபத்தை பகிர்ந்துகொள்வது தொடர்பான நிபந்தனைகளும் அரசாங்கத்திற்கு பாதகமாக அமைந்துள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய குறித்த தீர்மானம் ஆய்வு செய்யப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் முன்வைக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

மத்தளை விமான நிலையத்தின் நடவடிக்கைகள் தற்போது விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தால் ​முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போது வாரத்திற்கு ஒரு விமானம் மாத்திரமே விமான நிலையத்தில் தரையிறங்குவதாக சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்தார்.