Colombo (News 1st) பின்லாந்தில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திசர நாணாயக்காரவிற்கு கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று(17) பிணை வழங்கியுள்ளது.
இன்று முற்பகல் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்காரவின் சகோதரரான திசர நாணாயக்கார கடந்த 28ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பின்லாந்தில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி 30 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
கம்பஹா நீதவான் சிலனி பெரேரா முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளின் அடிப்படையில் அவரை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
திசர நாணாயக்கார மற்றும் அவரது பிணையாளர்களுக்கு வௌிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது திசர நாணாயக்காரவிற்கு எதிராக 5 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பலபிட்டிய பொலிஸ் அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.
இதன்காரணமாக அவரை பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல அனுமதி வழங்குமாறு பொலிஸார் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கமைய, அண்மித்த தினமொன்றில் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி முதலாவது வழக்கிற்குரிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யுமாறு கம்பஹா நீதவான் அறிவுறுத்தினார்.
இதனையடுத்து திசர நாணாயக்கார மீண்டும் மஹர சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.