இன்றுடன் நிறைவடையும் ஜனாதிபதியின் சீன விஜயம்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிச்சுவான் மாகாண செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி அனுர

by Staff Writer 17-01-2025 | 7:02 PM

Colombo (News 1st) சீனாவிற்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் Wang Xiaohui ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(17) இடம்பெற்றுள்ளது.

பொருளாதார முன்னேற்றத்தில் முன்னணியில் இருக்கும் சீனாவின் சிச்சுவான் மாகாணத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் இந்த சந்திப்பின் மூலம் புதிய மட்டத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சிச்சுவான் மாகாணத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதாரம், வர்த்தகம், கலாசாரம், சுற்றுலாத்துறை மட்டுமன்றி அரசுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் அவற்றை புதிய நிலைக்கு உயர்த்துவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

எரிசக்தி உட்பட பல துறைகளில் சிச்சுவான் மாகாணம் அடைந்துள்ள சாதனைகளை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ளுமாறு மாகாண செயலாளருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இலங்கை தற்போது பொருளாதார ரீதியாக ஸ்திரமடைந்து வருவதாகவும் வெளிப்படையான ஆட்சியின் கீழ் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது நாட்டில் இருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

இலங்கை தற்போது அரசியலில் ஒரு திருப்புமுனையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு மக்கள் ஒன்றிணைந்து மூன்றில் இரண்டு  பெரும்பான்மையை வழங்கி தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அந்த ஆணையின் ஊடாக மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்ற அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி இந்த சந்திப்பில் தெரிவித்தார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி சீன விஜயத்தை நிறைவு செய்து இன்று நாடு திரும்பவுள்ளார்.