வெலே சுதா உள்ளிட்ட மூவருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை

by Staff Writer 15-01-2025 | 10:22 PM

Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட சுமார் 17 கோடி ரூபா பணம் மற்றும் சொத்துகளுக்கு உரிமை கோரியமை உள்ளிட்ட 17 குற்றங்கள் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட வெலே சுதா என்றழைக்கப்படுகின்ற கம்பள வித்தானகே சமந்த குமார, அவரது மனைவி உள்ளிட்ட மூவருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹெரோயின் விற்பனை மூலம் ஈட்டப்பட்ட பணத்தை கொண்டு கொள்வனவு செய்யப்பட்டிருந்த பல கோடி ரூபா பெறுமதியான வீடுகள், 4 அதிசொகுசு வாகனங்கள், மூன்றரை கிலோகிராம் தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை அரசுடைமையாக்குவதற்கு உத்தரவிட்ட கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட பணம் வைப்பிலிடப்பட்டுள்ள சில வங்கிக்கணக்குகளையும் அரசுடைமையாக்கி உத்தரவிட்டார்.

பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மாஅதிபர் தாக்கல் செய்திருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் முறைப்பாட்டாளர் தரப்பினால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீண்ட வழக்கு விசாரணையின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி தெரிவித்தார்.

இதனைத் தவிர பிரதிவாதிகள் மூவருக்கும் 16 கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட அபராதத்தை விதித்த நீதிபதி, குறித்த அபராதத்தை செலுத்தத் தவறினால் 38 வருட சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டே பிரதிவாதிகள் சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட சொத்துகளை கொள்வனவு செய்துள்ளமை முறைப்பாட்டாளர் தரப்பினரால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவருவதாக தீர்ப்பை அறிவித்த நீதிபதி குறிப்பிட்டார்.

போதைப்பொருள் வர்த்தகத்தால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் கவனம் செலுத்தும்போது பிரதிவாதிகள் கோரும் இலகு சிறைத்தண்டனை விதிக்க முடியாது எனும் திறந்த மன்றில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

வழக்கின் முறைப்பாட்டாளர் தரப்பை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா வழிநடத்தினார்.