Colombo (News 1st) சீமெந்துக்காக விதிக்கப்பட்ட செஸ் வரியை #Cess Tax) குறைக்கும் நிதியமைச்சின் யோசனைக்கு அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர், கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சீமெந்து பொதியின் விலை சுமார் 100 ரூபாவால் குறைவடையுமென நிதியமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இவ்வருட இறுதி வரை அஸ்வெசும பயனாளிகளுக்காக வழங்கப்படவுள்ள நலன்புரி திட்டங்களுக்கும் தெரிவுக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்காக வழங்கப்படும் 15,000 ரூபா கொடுப்பனவை 17,500 ரூபா வரையிலும்
8,500 ரூபா கொடுப்பனவை 10,000 ரூபா வரையிலும்
2,500 ரூபா கொடுப்பனவை 5,000 ரூபா வரையிலும் அதிகரிப்பதற்கு அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் அஸ்வெசும கொடுப்பனவின் கீழ் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் குடும்பங்களுக்கான கொடுப்பனவு தொகையில் மாற்றங்களை மேற்கொள்ளாதிருக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.