Colombo (News 1st) ''உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்'' எனும் பாரதியின் வாக்கிற்கு வடிவம் தரும் தைப்பொங்கல் திருநாள் இன்றாகும்.
சூரிய சக்தியின் பெருமையை பறைசாற்றி, உழவர்களை முன்னிலைப்படுத்தும் தைத்திருநாள் இன்று(14) பிறந்துள்ளது.
உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகவாழ் இந்துப்பெருமக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடுகின்றனர்.
இயற்கை கொடைகளை இறைவனின் வரமாகப் போற்றிக்கொண்டாடும் மரபு தைப்பொங்கலின் சிறப்பம்சமாகும்.
நன்றி உணர்வு, ஒற்றுமை, விருந்தோம்பல், இறை உணர்வு, இயற்கையோடு இசைந்து வாழ்தல் என நல் விழுமியப் பண்புகளை தைத்திருநாள் உலகிற்கு எடுத்தியம்புகின்றது.
"தைத் திங்கள் தண்கயம் படியும் என நற்றிணையும்
தைத் திங்கள் தண்ணிய தரினும்” என குறுந்தொகையும்
“தைத் திங்கள் தண்கயம் போல்” என புறநானூறும்
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என கலித்தொகையுமாக சங்க இலக்கியங்கள் தைத்திருநாளின் சிறப்பை உலகுக்கு பறைசாற்றி நிற்கின்றன.
''தை பிறந்தால் வழி பிறக்கும்'' எனும் உயரிய கருத்திற்கேற்ப தமிழர் பண்டிகையான பாரம்பரியம் மிக்க பொங்கல் திருநாளைக் கொண்டாடி இயற்கைக்கும் ஏனைய உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நாள் இன்றாகும்.