கல்கிசை துப்பாக்கிச்சூடு குறித்து பொலிஸார் விசாரணை

கல்கிசை துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் விசாரணை

by Staff Writer 09-01-2025 | 4:24 PM

Colombo (News 1st) கல்கிசையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் வருகை தந்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் ஹங்வெல்ல பகுதியிலிருந்து திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிசை - வட்டரப்பல பகுதியில் நேற்று முன்தினம்(07) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 36 மற்றும் 20 வயதான இருவர் உயிரிழந்தனர்.

துப்பாக்கிதாரிகள் இருவரும் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் துப்பாக்கிதாரிகள் வருகை தந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் அன்றிரவு ஹொரணை முனகம பகுதியில் வைத்து பொலிஸாரால் கண்டறியப்பட்டது.

குறித்த மோட்டார் சைக்கிள் துப்பாக்கிதாரிகளால் பயன்படுத்தப்பட்டது என விசாரணைகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அஹுங்கல்ல முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு பலத்த காயமேற்பட்டுள்ளது.

இன்று(09) காலை 06 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கர வண்டியின் சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.