Colombo (News 1st) ஊழல் மோசடிக்கு எதிராக பேனாவை பயன்படுத்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் கடந்துள்ளன.
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக தமது உயிரையும் துச்சமென எண்ணி சமூகத்தில் இழைக்கப்படும் அநீதிகளையும், மோசடிகளையும் மக்களுக்கு துணிச்சலாக பகிரங்கப்படுத்தினார்.
எவராலும் நெருங்க முடியாத தகவல்களை மிக சாதுரியமாக அண்மிக்கும் ஆளுமையும், திறனும் கொண்ட அவர் அதிசிறந்த ஆய்வுக் கட்டுரை ஆசியராக பல மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக பல தடவைகள் உயிர் அச்சறுத்தலை அவர் எதிர்கொண்டார்.
இறுதியாக 2009 ஜனவரி 8 ஆம் திகதி முற்பகல் 10.25 அளவில் லசந்தவின் உயிர் குழுவொன்றினால் பறிக்கப்பட்டது.
தொழிற் தளத்திற்கு பயணிக்கும் வழியில் இரத்மலானை அத்திட்டிய வீதியில் லசந்த விக்ரமதுங்கவை வழிமறித்த ஆயுதக் குழுவொன்று வழிமறித்து அவர் மீது தாக்குதல் மேற்கொண்டபோது லசந்தவிடம் பேனாவும், குறிப்பேடும் மாத்திரமே இருந்தன.
சர்வதேச ரீதியில் பல விருதுகளால் அலங்கரிக்கப்பட்ட லசந்த விக்ரமதுங்க அச்சமின்றி முன்னெடுத்தப் பயணத்தால் அவர் கொல்லப்பட்ட பின்னரும் ஐ.பி.ஐ வேல்ட் பிரஸ் பிரீடம் ஹீரோ விருதினால் கௌரவிக்கப்பட்டார்.
இந்த சிரேஷ்ட ஊடகவியலாளரை மௌனிக்க செய்த கொலைக் கும்பல் சுதந்திரமாகத் நடமாடும் நிலையில் அவரது மரணத்தின் ஊடாக அரசாங்கத்தை மாற்றி ஆட்சிக்கு வந்த தரப்பினரும் காலம் கடத்தும் செயற்பாட்டையே பின்பற்றினர்.
நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த லசந்தவின் புகழுடல் 2016 செப்டெம்பர் 27ஆம் திகதி தோண்டியெடுக்கப்பட்டதுடன் சந்தேகநபர்கள் பலர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட போதிலும் இன்னும் இந்தக் கொலைக் குற்றத்துக்கு நீதி கிடைக்கவில்லை.
மகிழ்ச்சியான தருணங்களைவிட துன்பங்களின்போது நெருக்கமாக இருந்த லசந்த விக்ரமதுங்க தெபான கலையகத்திற்கு தாக்குதல் நடத்தப்பட்ட சில நிமிடங்களில் வருகை தந்திருந்தார்.
ஒரு ஊடகவியலாளராக அவரது வாழ்க்கை நிலையும் துணிச்சலானது என்பதை அறிவிப்பதாவே அந்த கருத்து அமைந்திருந்தது.
"குண்டுத்தாக்குதல் நடத்தி, தீயிட்டுக் கொழுத்தி, கொன்றழித்து உண்மையை மறைக்க முடியும் என இந்தத் தாக்குதலின் சூத்திரதாரிகள் நினைக்கக்கூடும்."
குற்றவாளிகள் எப்போதும் உண்மைக்கு பயப்படுகிறார்கள். இவர்கள் எப்படி சட்டத்தில் இருந்து தப்பித்தாலும் , இந்தக் குற்றங்களைச் செய்தவர்களும், திட்டமிட்டவர்களும் மனசாட்சியிலிருந்து தப்ப முடியாது.