சமுர்த்தி உத்தியோகத்தர் உட்பட 3பேர் விளக்கமறியலில்

துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஓமானில் உயிரிழந்த இலங்கை யுவதியை தொழிலுக்காக அனுப்பிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட 3 சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

by Staff Writer 06-01-2025 | 2:12 PM

Colombo (News 1st) 

பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஓமானில் உயிரிழந்த இலங்கை யுவதியொருவரை தொழிலுக்காக அனுப்பிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை - சூச்சி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான இளம் யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த யுவதிக்கும் அவரது மூத்த சகோதரிக்கும் துபாயில் தாதியர் சேவையில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி அவர்களை ஓமானில் வீட்டு வேலைக்கு அனுப்புவதற்கு சந்தேகநபர்கள் செயற்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா விசாவில் வௌிநாடு சென்றமையினால் தொழிலின்றி ஓமானின் பல்வேறு இடங்களிலும் குறித்த யுவதிகள் இருவரும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தமது தங்கை கடந்த 22ஆம் திகதி உயிரிழந்ததாக மூத்த சகோதரி தனது தாய்க்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த யுவதியையும் அவரது மூத்த சகோதரியையும் ஏமாற்றி வௌிநாட்டுக்கு அனுப்பிய ஹம்பாந்தோட்டை பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.

சந்தேகநபர்கள் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.