யானையிடமிருந்து தப்பிக்க ஆற்றில் பாய்ந்த நபர்

காட்டு யானையிடமிருந்து தப்பித்துக்கொள்ள ஆற்றில் பாய்ந்த 6 பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு

by Staff Writer 05-01-2025 | 9:53 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு செங்கலடி - மயிலவெட்டுவான் பகுதியில் காட்டு யானையிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக ஆற்றில் பாய்ந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

வந்தாறுமூலை மயிலவெட்டுவான் பகுதியைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான 49 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரும் அவரது மகனும் விறகு வெட்டுவதற்காக இன்று(05) காலை காட்டிற்குச் சென்ற போது யானை துரத்தியுள்ளது.

இதனையடுத்து யானையிடமிருந்து தப்புவதற்காக இருவரும் அருகிலிருந்த வீரக்கட்டு ஆற்றில் குதித்துள்ளனர்.

இருவருக்கும் நீச்சல் தெரிந்திருந்த நிலையில் மகன் நீந்தி வௌியில் வந்தபோதிலும் தந்தை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொதுமக்கள் இணைந்து ஆற்றில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்த போது ஆற்றில் இருந்து குதித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.