''ஊடகங்களுக்கு தணிக்கை விதிக்கும் எண்ணம் இல்லை''

ஊடகங்களுக்கு தணிக்கை விதிக்கும் எண்ணம் புதிய அரசாங்கத்திற்கு இல்லை - அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

by Staff Writer 31-12-2024 | 3:44 PM

Colombo (News 1st) ஊடகங்களுக்கு தணிக்கை விதிக்கும் எண்ணம் புதிய அரசாங்கத்திற்கு இல்லை என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர், டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஊடக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமது கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளை அமைச்சரிடம் முன்வைப்பதற்கும் பல கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்குமான நோக்கில் இலங்கை இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சங்கத்தை பாதிக்கும் வகையில் தற்போது வரைவுசெய்யப்பட்டுள்ள சட்டமூலம் மற்றும் நடைமுறையிலுள்ள சட்டங்களில் உள்ள சில குறைபாடுகள் தொடர்பில் அமைச்சருக்கு இதன்போது தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஊடகங்களும் அரசாங்கமும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டுமென அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக ஊடகங்களை முறையாக நிர்வகிக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றுவதாகவும் ஊடகங்கள் மீது தணிக்கை விதிக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் வெகுஜன ஊடக அமைச்சு பொறுப்பற்ற, செயலிழந்த இடமாக மாற்றப்பட்டுள்ளதால் வெகுஜன ஊடக அமைச்சை சரியான இடத்திற்கு கொண்டுசெல்வதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என அமைச்சர் கூறினார்.

ஊடகங்கள் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் செயற்படக்கூடிய சூழலை உருவாக்கி ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏனைய செய்திகள்