தென் கொரியாவில் விபத்திற்குள்ளான விமானம்

தென் கொரியாவில் விபத்திற்குள்ளான விமானம்

by Staff Writer 29-12-2024 | 2:28 PM

Colombo (News 1st) தென் கொரியாவில் விமானமொன்று தரையிறங்கும் போது இன்று(29) காலை  விபத்திற்குள்ளாகியுள்ளது.

 

விமானம் விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்துள்ளனர்.

விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த விபத்து தென்கொரியாவில் இடம்பெற்ற மிக மோசமான விபத்தாக அந்நாட்டு வரலாற்றில் பதிவானது.

தென்கொரியாவின் ஜேஜூ எயார் நிறுவனத்துக்கு சொந்தமான பொயிங் 737 ரக 7C2216 பயணிகள் விமானம்

இன்று(29) அதிகாலை தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.

விமானத்தில் பயணிகள் 175 பேரும் விமான ஊழியர்கள் 6 பேரும் இதன்போது பயணித்தனர்.

விமானம் தென்கொரிய தலைநகர் சோல்லில் இருந்து 282 கிலோமீற்றர் தொலைவிலுள்ள முஆன் விமான நிலையத்தில் இன்று(29) காலை 9.11க்கு தரையிறங்கவிருந்தது.

எனினும் காலை 9 மணியளவில் விமானத்தின் ஒரு எஞ்சின் வெடித்தது.

பின்னர் விமானம் முஆன் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த போது லேண்டிங் கியர் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் அது செயலிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் விமானத்தின் கீழ் பாகம் ஓடுதளத்தில் முழுமையாக உராய்ந்துச் சென்றது.

பின்னர் விமானம் பாதுகாப்புச் சுவருடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தையடுத்து விமானம் வெடித்து தீப்பற்றி முழுமையாக சேதமடைந்தது.


விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரும் தீயணைப்பு பிரிவினரும் விரைந்து செயற்பட்டு தீயை அணைப்பதற்கு முயற்சி செய்தனர்.

இதற்காக 32க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

தீயணைப்பு சேவை பிரிவின் 490 ஊழியர்களுடன் 455 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தொடர்ச்சியான பிரயத்தனத்தின் பின்னர் இருவரின் உயிர் காப்பாற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்களில் உறுதிப்படுத்தப்பட்டது.

இவர்கள் இருவரும் விமானத்தின் பணிக்குழாத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


விமானத்தில் இருந்த 173 பயணிகளும் தென்கொரியர்கள் என்பதுடன் 2 பேர் தாய்லாந்து பிரஜைகள்யாவர்

இவர்களில் பெரும்பாலானோர் நத்தார் பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் தென்கொரியா நோக்கி சென்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


விபத்துக்கான காரணம் என்ன?

விமானம் விபத்துக்குள்ளானமைக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

எனினும் விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் அதன் தரையிறங்கும் கட்டமைப்பில் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கலாமென அதிகாரிகள் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

பறவைகள் விமானத்தில் மோதியதால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே விமானத்துடன் பறவைகள் மோத வாய்ப்புள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறையினால் விமானிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனால் விமானத்தை தரையிறக்கும் செயற்பாட்டை நிறுத்துமாறு விமான கட்டுப்பாட்டு அறையினால் விமானிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தாம் குழம்பிப் போயுள்ளதாக விமானியினால் பதிலளிக்கப்பட்ட நிலையில் விமானத்தை எதிர்திசையில் தரையிறக்குமாறு கட்டுப்பாட்டு அறையினால் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை விமானி ஏற்றுக் கொண்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

முஆன் விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் தற்போது தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

  


விபத்து தொடர்பில் அதிகாரிகள் கூறுவது என்ன?

விபத்து தொடர்பில் அறிந்த உடனேயே தென்கொரிய பதில் ஜனாதிபதி சசோய் செங்-மொக் அங்கு சென்றார்.

விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த அனைவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்த அவர் முஆன் பகுதியை விசேட அனர்த்த வலயமாக அறிவித்தார்.

ஜேஜூ எயார் நிறுவனமும் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனமும் இந்த விபத்துக்காக அனைவரிடமும் மன்னிப்பை கோரியுள்ளன.

தாய்லாந்து பிரதமர் பெடொங்டன் ஷினவத்ரா விபத்து தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

22 வருடங்களின் பின்னர் தென்கொரியாவில் இடம்பெற்ற மிகப்பயங்கரமான விபத்தாக இந்த விபத்து பதிவாகியுள்ளது.

2002 ஆம் ஆண்டு தென்கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 129 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.