Colombo (News 1st) கடந்த நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த சுமார் 80,000 ஏக்கர் விளைநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட பயிர்ச்சேதங்கள் தொடர்பான ஆய்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களுக்கான இறுதி அறிக்கைக்கு பின்னர் இழப்பீடு வழங்கப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பயிர்ச்சேதங்கள் தொடர்பான ஆய்வுகளை நாளைமறுதினமும் அனுராதபுரம், குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பயிர்ச்சேதங்கள் தொடர்பான ஆய்வுகளை எதிர்வரும் 30 ஆம் திகதியும் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்யும் பணிகள் விவசாய அபிவிருத்தி திணைக்களம் மற்றும் விவசாய அமைப்புக்களின் பங்களிப்புடன் இடம்பெறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.