Colombo (News 1st) முழு உலகையும் கண்ணீரில் மூழ்கடித்த இரக்கமற்ற கடல் அலைகளின் கோரத்தாண்டவத்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியான பேரழிவு இடம்பெற்று இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
திகதி:- 2004 டிசம்பர் 26
நேரம்:- காலை 6.58
இடம்:- வடக்கு சுமத்திரா தீவுகளை அண்மித்த ஆழ்கடல்
9.1 மெக்னிடியூட் அளவில் பாரிய நில நடுக்கம்
நத்தார் பண்டிகைக்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமையை ஓய்வாக கழித்துக்கொண்டிருந்த எவரும் பேரனர்த்தமொன்று ஏற்படவுள்ளதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தி அறைக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தன.
ஒருசில நிமிட இடைவௌியில் திருகோணமலை பகுதியில் கடல் பெருக்கெடுத்ததாக தகவல் வந்தது.
நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு மணித்தியாலங்களில் காலை 9.26 அளவில் மணிக்கு 800 கிலோமீட்டர் வேகத்தில் வந்த இராட்சத அலைகள் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்தன.
மனித வரலாற்றில் நாம் அனுபவித்த பாரிய இயற்கை அனர்த்தம்.
ஆசிய பிராந்தியத்திலுள்ள 14 நாடுகளைச் சேர்ந்த 227,898 பேரின் உயிர்கள் சில நொடிகளில் பறிக்கப்பட்டன.
எமது நாட்டிலும் சுமார் 35,000 பேர் உயிரிழந்தனர்.
பெரேலிய பகுதியில் பயணிகள் ரயிலை சுனாமி அலைகள் பற்றிக்கொள்ள, அதிலிருந்த 1270 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
இதில் பயணித்த மேலும் 141 பேருக்கு என்ன நடந்தது என்பது இன்னமும் எவரும் புரியாத புதிராகவே உள்ளது.
இந்த பேரனர்த்தத்தின் தன்மையை உடனடியாக புரிந்துகொண்ட நாம் செய்தி அறிக்கையிடலுக்கு அப்பாற்சென்று கெப்பிட்டல் மகாராஜா குழுமம் என்ற வகையில் ஒன்றிணைந்த செயற்றிட்டங்களை பல்வேறு கட்டங்களாக முன்னெடுத்தோம்.
இதற்காக நாம் ஆரம்பித்த நேரலை, செய்தி அறிக்கைக்காக தயாரிக்கப்பட்ட செய்தி நிரற்படுத்தல் ஆவணம், 20 ஆண்டுகளின் பின்னரும் எமது நினைவுகளை இன்றும் புதுப்பிக்கின்றது.
மக்களுக்கு தொடர்ச்சியாக தகவல்களை வழங்கிக் கொண்டிருந்த நாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கும் அன்று நடவடிக்கை எடுத்தோம்.
உறவுகளையும் உடமைகளையும் தொலைத்துவிட்டு செய்வதறியாது நிர்க்கதியான எமது மக்களுக்காக நிவாரண யாத்திரையை நாம் முன்னெடுத்தோம்.
அன்று ஒன்றாக எழுந்துநின்ற எம்மால் ஆழிப்பேரலையின் அழிவுகளில் இருந்து மீண்டெழுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியது.
20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மீண்டும் இத்தகைய துயரச் சம்பவமொன்று நிகழக்கூடாது என்ற பிரார்த்தனைகளுடன் எமது உறவுகளை நாம் நினைவுகூருகின்றோம்.
''ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு'' சுனாமி கற்பித்த பாடத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்வோம்.
நமக்காக நாம், ஒன்றாய் எழுந்திடுவோம்...